தமிழ் நடைக் கையேடு
தமிழ் நடைக் கையேடு என்பது தமிழ் உரைநடையை எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைத் தொகுத்துத் தரும் ஒரு நூலாகும். இக்கையேட்டில் நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்தும் முறை, சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதுவதற்கான அடிப்படைகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளதோடு, சந்தி விதிகள் பட்டியல் மூலமும், எடுத்துக்காட்டுக்கள் வழியும் விளக்கப்பட்டுள்ளன. பொருள் தெளிவு சிதைவுறா வண்ணம் உரிய சொற்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தும் முறை, பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டிய எழுத்துப்பெயர்ப்பு உள்ளிட்ட முறைமைகள், அடிக்குறிப்பு, துணைநூற்பட்டியல் முதலானவற்றை ஆய்வுக்கட்டுரைகளில் எழுதும் முறை போன்றன விளக்கப்பட்டுள்ளன.